Thursday, 27 October 2011

அகத்தியரின் மகிமைகள்:

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும்... அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.


மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.



சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.

அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.


அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்

26. அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்:

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:


1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

நிவேதனம்:

பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:

1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

நன்றி : அகஸ்திய விஜயம் 

சிறுநீரக கற்கள்

சதுரகிரியில் அன்னதானம் செய்து கொண்டுவரும் 72வயது முதிர்ந்த ஸ்ரீசிவசங்கு ஐயா அவர்கள், அவருக்கு சதுரகிரியில் ஒரு சித்தர் கற்றுக்கொடுத்த மருந்தினை இன்றளவும் இலவசமாக கொடுத்து உதவுகிறார். மூன்றே மாத்திரையில் 8மி.மீ அளவுள்ள சிறுநீரக கற்கள், சென்னையில் உள்ள ஒரு மருத்துவருக்கு வெளியில் வந்தது உண்மை. வேண்டுவோர் கண்டிப்பாக தொடர்பு கொள்ளலாம்.

Thursday, 29 September 2011

முதல் நாடி

சென்ற இதழில் நாடி காண்பதற்க்குகூட அவர்கள் அருள் வேண்டுமென்று கூறியிருந்ததுபோல், சிவரூபமான சித்தராகிய ஸ்ரீஅகஸ்த்திய மஹாரிஷியின் நாடி முதன்முதலில் எனக்கு சென்னை, சாலிகிராமத்தில் திரு.கலியமூர்த்தி அவர்களின் தவப்புதல்வன் திரு.பாலரிஷி (எ) பாலமுருகன் வாயிலாக 05/04/2000 அன்று கிடைத்தது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று.

பொதுகாண்டம் - ஹரிஹரன் - 05/04/2000.

(நல்ல பெற்றோர்க்கு இடைமகனாய் பிறந்து, இதை காணுகின்ற வேளையில் அன்னை மட்டும் தீர்க்கமாக உள்ளார். கூடப்பிறந்தவர்கள் ஐந்து ஆண்மகன்களும், மூன்று பெண்களுமாக இருந்து, அதில் நான்கு சகோதர்களுக்கும் மூன்று சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. இதை காணும் பொழுது, எனக்கு திருமணமாகி ஆண்குழந்தை ஒன்று உண்டென்றும், அரசாங்கத்தில், இரயில்வே துறையில், எழுத்து மார்க்கமான பணிபுரியும் என் பெயர் ஹரிஹரனும், அம்மாவின் பெயர் இலட்சுமி, தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனைவி ஸ்ரீஉமா என்றும் அற்புதமாக கூறி, இதை நான் எனது முப்பத்திமூன்றாவது வயதில் காணவேண்டுமென்பது விதியென்றார்.)
... யோகமுள பெருநகர சார்ந்த இன்பம்
ஈடில்லா வளர்ச்சியதும் பெண்சேய்தோன்றும்...


(பெருநகரத்தில் (சென்னை) வசிப்பேனென்றும், பெண்குழந்தை உண்டுமென்றார் - அவரது கூற்றுப்படி எங்களுக்கு 2001ம் வருடம் பெண்குழந்தை பிறந்தது)

... உயர் இல்லாள் எழுபானீர் மூன்றும்ஐந்தில்
தப்பில்லா இல்லவளும் முன்னேமோட்சம்....

(எனது மனைவி எழுபத்து மூன்று வயது காலம் வரை சிறப்பாக வாழ்ந்து, எனக்கு முன்னே மோட்சம் பெறுவாள் என்று கூறியுள்ளார்)

ஹரிஹரன் - 14/10/2002

... அஞ்சிவரும் ஈராண்டின் முன்புதானே
அரும்பாடு ருணத்தோடு கணிணிகல்வி
கல்விகற்று சிங்கமுக தேசம்சென்று
கண்டமதில் தப்பித்து இவனின் இல்லாள்
நல்தவத்தின் அருளாலே ருணத்தைதந்து ....

(கடந்த 2000 வருடம் கட்டிடவியல் பொறியாளரான நான், ஜாவா கணினி கல்வி பயின்று, சிங்கப்பூர் சென்று, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நேரத்தில், கணிணிதுறை சரிந்த நிலையில் சுமார் ஒரு இலட்சம் செலவுடன் இந்தியா திரும்ப நேர்ந்ததை குருமுனி அவர்கள் நல்தவத்தின் அருளால், மனைவிக்கு வரவேண்டிய கண்டத்தை தவிர்ப்பதற்காக ருணத்தை (கடனை)கொடுத்தோம் என்றார்.. என்னே அவரின் கருணை...)


... மேறுவுடன் பிலவங்க ஆனித்திங்கள்
 மால்வாரம் இருபானெட் பூரம்சார்மீன் ....

(எனது வலதுகை பெருவிரல் அடையாளத்தின் மூலம் பல நாடி கட்டுகளை தேடியபின் கிடைத்த எனது நாடிகளிருந்து வந்த வரிகளின் விளக்கமானது - நான் பிறந்தது பிலவங்க வருடம் ஆனி மாதம் 28ம் நாள் பூரம் நஷத்திரம் என்பதனை நான் கூறாமலேயே எனக்குக் கூறியது என்னை ஆச்சரியபட வைத்தது.)

... வண்ணமதாய் நல் ஈன்றோர்க்கு இடையின்சாயல்
வளமான அன்னைமட்டும் தீர்க்கம்இந்நாள்

தீர்க்கமுள ஆண்பஞ்சம் சூலம்பெண்ணும்
திருமணமும் வேதமது பெண்ணும்கண்டு
பார்க்கவரும் மகன்மன்றல் ஆண்சேய்ஒன்று
பாலகனும் இறைதொண்டு எழுத்துப்பார்வை
பார்வையுடன் தொடர்ந்தோடும் வாகனத்தில்
பணிசிறப்பு சுயதேட்டு சிந்தைகூட
தீர்வாகும் ஹரிஹரனே மகனின் நாமம்
தெரியத்தாய் இலக்குமியும் அம்மாளாக
ஆகத்தன் வெண்ணையுண்ட மூர்த்தியாக
அழகு இல்லாள் திருமுன்சொல் உமாவின் நாமம்
சோகமிலா நூல்நோக்கம் முப்பான்மூன்றில்......

Tuesday, 27 September 2011

நாடி



தெந்திசை உயர்ந்ததென்று
தாழவைக்கத் தானமர்ந்து
சிவய நமசிவ வென்று
பொதிகை மலையிருந்து-பரம்
பொருளின் பூரணத்தை
பாடலுக்குள் உணர்த்தி
வைத்த குறுமுனியே
அகத்தியனே!
உமைக் குருவெனவே
தாழ்பணிந்து தொழுகின்றேன்! 
உடனிருந் தருளிடுவாய்!

"ஐயனை நாடி"...... 
 (சிவகிரியாம் சதுரகிரியின் ஆனந்த அனுபவத்தோடு .... ஞானத்தைத் தேடிய ஆத்மாவின் உள்ளத்தின் வார்த்தைகளை.. மஹாளயபக்ஷ அமாவாஸையில் எழுததூண்டிய குருவிற்கு முதல் வணக்கம்)

முன்னுரை:
 "அரிது, அரிது மானிடராய் பிறத்தலரிது - மானிடரின் கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதனின் அறிது - என்ற வரிகளுக்கேற்ப - இப்பூவுலகில் என்னை மானிடனாக வடிவமைத்த இறைசக்திக்கு முதல் வணக்கம்.  ஐயனை நாடி என்கிற தலைப்பில் என்னை எழுத வைத்த, சிந்தையில் குடிகொண்டு நல்லோர்களை நல்வழிபடுத்திக் கொண்டிருக்கும் தலையாய சித்தரும் - சிவரூபமான ஸ்ரீ லோபாமுத்ர ஸஹித ஸ்ரீ அகஸ்தியமஹா ரிஷிக்கு சிரம் தாழ்ந்த பல கோடி வணக்கங்கள்.  இந்நூலை, எனை பத்துத் திங்கள் சுமந்து, தான் சேர்த்த புண்ணியங்களை எனக்காக அர்ப்பணித்த - "தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்ற வரிகளின் அர்த்தத்தை எனக்கு உணர வைத்த நடமாடும் தெய்வமாகிய - எனது தாய்க்கும், வேதகிரி என்கிற சதுரகிரியில் மகாலிங்கசுவாமியின் முழு ஆசி பெற்ற - ஈசசங்கோன் என்று குருமுனியால் அழைக்கபெற்று, இன்றளவும் குருமுனியின் ஆசியோடு என்னை நல்வழிபடுத்திக் கொண்டிருக்கும் அன்னதான சித்தராகிய ஸ்ரீசிவசங்கு ஐயாவிற்கும் நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன். 

ஸ்ரீ அகஸ்த்தியர் காயத்ரி
"ஓம் அகஸ்த்தீஸ்வராய வித்மஹே
பொதிகை ஸஞ்சாராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரஸோதயாத்!"

ஸ்ரீ ஈசசங்கோன் காயத்ரி
"ஓம் அன்னதாதாய வித்மஹே
பரப்ரஹ்மனேய தீமஹி
தந்நோ ஈசசங்கோன் ப்ரஸோதயாத்!"

குறிப்பு: இந்நூல் சுயசரிதையோ அல்லது விளம்பரமோ அல்ல. மாறாக, கதைகள் மூலம் நாம் அறிந்ததைக் காட்டிலும், நேரில் நடந்தவற்றை, ஆதாரத்துடன் விளக்குவது, தேடுதலை உணரமுடியும் என்பதற்காகவே! இது பக்குவபட்டு ஞானத்தைத் தேடுகின்ற ஆத்மாக்களுக்கு சொந்தமானதாகும். இந்நூல் நாடி ஜோதிடத்தின் மூலம் குருமுனி எனக்கு கூறிய எதிர்கால பலன்களும், அதன்மூலம்  நான் அனுபவித்த ஆனந்தமும் அடங்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ர ஸஹித ஸ்ரீ அகத்தீஸ்வராய நம:
(நாடி ஜோதிடம் - 22/03/2011 அன்று மாலை 8:30 மணியளவில் குருமுனி கூறிய வரிகளிருந்து....)
..... அன்னையருள் கொண்டமைந்தன் வாழ்விற்காக
அறிவிப்பேன் சூட்சமங்கள் அறியும்காலம்
இன்முகமாய் ஈசஹரியோன் உமையாளோடு
எடுத்துரைப்பேன் சாட்சியோடு எண்ணாவண்ணம்
வண்ணம்மேல் பலனுரைக்கும் காலம்தன்னில்
வழிபடுத்த மகன்செயலில் எமதுசிந்தை
வின்னமிலா இல்லவளின் ஆரோக்கியங்கள்
வளமோடு பிணிநீங்கி அருளைதந்தோம்
தந்ததோடு தன்வாழ்வு அனுபவத்தை
தனைஅறியா மாந்தர்க்கும் நன்குஉணர
சுந்தரமாய் வழிவகுத்தோம் ஞானசிந்தை
சூழ்ந்திடவே சதுரகிரி ஈசன் ஆசி

ஆசிதுணை  ஆளுகின்ற ப்ரத்தியங்கரே
அரவணைப்பாய் மிகைவெற்றி மகன்முயற்சி ....

(விளக்கம்: அன்னை பார்வதிதேவியின் அருளை கொண்ட மைந்தன், சூட்சமங்களை அறியும் காலம், தன் இல்லாள் உமாவோடு காணவந்துள்ளதை சாட்சியாக கூறி - காணுகின்ற வேளையில் மகன் மனதில் எமது சிந்தையை கொடுத்து, இல்லவளின் பிணியை(புற்றுநோய்) நீக்கி ஆரோக்கியங்களுடன் அருளை தந்தோமென்றார். மேலும் தன் வாழ்வு அனுபவத்தை, மாந்தர்கள் அறிந்து கொள்வதற்காக நூலாக மாற்றும் சிவஹரிஹரனுக்கு ஞானசிந்தையை கொடுத்து, சதுரகிரி ஈசனின் ஆசியும், இவ்வுலகை ஆளுகின்ற ப்ரத்தியங்கரா மாகாளியின் ஆசியும் உண்டென்று கூறினார். இந்நூலை எழுதுவதற்கு ஆசிகள் கொடுத்த, எல்லாம் வல்ல அவர்களின் திருவடிகளில் சமர்ப்பித்து, ஆனந்தத்துடன் சரணடைகிறேன். ) 

ஆன்மீகம்: உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியையும் உள்ளடக்கியது பிரபஞ்ச சக்தி. பஞ்சபூதங்களும் அதனுள் அடக்கம். பஞ்சபூதங்கள் இல்லையேல் எந்த சஞ்சாரமுமில்லை. இதுவே உலக நியதி. ஆத்மா (எ) ஆன்மா என்பது பிரஞ்ச சக்தியால் படைக்கப்பட்டதாகும். அதற்கு உருவம் கிடையாது. எதனுள் இருக்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் ஆற்றல் பெற்றது. ஆன்மீகமென்பது சக்தியால் படைக்கபெற்ற ஒரு அருமருந்து. அதை சுவைக்கத் தெரிந்தால், ஆனந்தத்தை உணரலாம். மதத்தின் அடிப்படையில், பல பெயர்கள் பெற்றிருந்தாலும், குணத்தாலும் கொள்கையாலும் ஒன்றே.

இறைவன் நம்மை படைக்கும்பொழுது, நம் கர்மவினைகளிருந்து மீள்வதற்கு நல்பாதையை காட்டியுள்ளார். சித்தர்கள், ரிஷிகள் மற்றும் ஞானிகள் மூலமாக ந்மக்கு அதை உணர்த்திக் கொண்டிருக்கிறார். சித்தத்தை(மனதை) சித்தபட(ஒரு நிலைபடுத்துதல்) வைத்தால், சித்தத்தை(சித்தரை) உணரமுடியும்.

நாடி ஜோதிடம் என்பது, நம்மை நல்வழிபடுத்துவதற்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - சித்தர்களாலும், ரிஷிகளாலும் ஓலைக்சுவடியின் வாயிலாக எழுதி வைக்கப்பட்ட அற்புத மருந்து. பூர்வீகம் வைத்தீஸ்வரன்கோவிலாக இருந்தாலும், இன்று நாடெங்கும் கிளைகள் உள்ளன. அதை பார்ப்பதற்குகூட நமக்கு அவர்களின் அருள் இருந்தால்தான் கிடைக்குமென்பது முற்றிலும் உண்மை.


நன்றியுடன்,

(சிவஹரிஹரன்.)
ஆனந்தம் தொடரும் வரை சிறிது ஓய்வெடுக்கவும்......


Disclaimer & Privacy Policy


Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to sivahariharan2007@gmail.com